பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 4ஜி சேவை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிக்கு ஆளான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். தொலைபேசி சேவை நிறுவனங்களை இணைத்து புதுப்பிப்பதற்கான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த 2 நிறுவனங்களுக்கும் ஏறக்குறைய 14ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு எனப்படும் வி.ஆர்.எஸ்., 4ஜி ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்குவதற்கு மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படும். இதுமட்டுமின்றி, கோதுமை, பார்லிக்கான விலையை குவிண்டாலுக்கு 85 ரூபாய் உயர்த்தி ஆயிரத்து 925 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.