ஆன்லைனில் கல்வி கற்பதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் பைஜூஸ் அண்மைக்காலமாக ஆட்குறைப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்திய கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக பைஜூஸ் CEO ரவீந்திரன் அறிவித்தார்.
இது பைஜூஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் பைஜூஸ் மீதும் அதன் CEO பைஜூ ரவீந்திரன் மீதும் வழக்குத் தொடர ஆயத்தமாகியிருக்கிறார்கள்.
50,000 பேர் பணியாற்றும் பைஜூஸில் இருந்து 5 சதவிகிதம் அதாவது 2500 பேரை நீக்கியது குறித்து பைஜூ ரவீந்திரன் பேசிய போது, “2,500 பேரை நீக்கிய Lay off (பணி நீக்கம்) செய்ததாக அனைவரும் நினைக்கலாம். ஆனால் time off அதாவது அவர்களுக்கான ஓய்வு நேரமாகவே பார்க்கிறேன்.
தற்போது பைஜூஸ் நிறுவனத்தை நிலையான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதே எனது முதல் வேலையாக இருக்கும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய ரோல்களையும் அவர்களுக்கே தொடர்ந்து கிடைக்கச் செய்யும்படி எங்கள் HŔ நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறேன்.” என்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து “Im Sorry" எனக் குறிப்பிட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனுப்பிய மெயிலில், “ நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாது. ஆனால் வெளியேற்றப்பட்டவர்களுக்கான உதவி தொகுப்பை வழங்கினோம். அதன்படி, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான நீட்டிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு, வெளியூர் சேவைகள், விரைவான முழு மற்றும் இறுதி தீர்வு மற்றும் நிறுவனத்தின் ஊதியத்தில் இருக்கும் போது பணியாளர்களை வேலை தேட அனுமதிக்கும் சிறப்பு ஏற்பாடு ஆகிய வசதிகளை பெறலாம்” எனவும் பைஜூ ரவீந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.