வரி இல்லா தமிழகம், இலவச தண்ணீர், இலவச மருத்துவம், இலவச கல்விக்கு வழி வகுப்பதே தனது கட்சியின் நோக்கம் என்று மை இந்தியா பார்ட்டி என்ற கட்சியை தொடங்கியுள்ள தொழிலதிபர் அனில்குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் பேசிய அனில் குமார், வரியே இல்லாத தமிழகம், இலவச தண்ணீர், மருத்துவம், கல்வி இவை அனைத்திற்கும் வழிவகுக்கும் வகையில் தன்னுடைய கட்சி செயல்படும் என்று கூறினார்.
கார்ப்பரேஷன் வங்கியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக தன் மீது வழக்குகள் உள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், வங்கி உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காததால் தன் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். 2014 ஆம் ஆண்டிலேயே தன்னுடைய கட்சியின் பெயரை பதிவு செய்ததாகவும், வழக்குக்காக கட்சி தொடங்கவில்லை என்றும் ஓஜா தெரிவித்தார்.