கர்நாடகா: பர்தா அணிந்து வந்த மாணவி..சுற்றி நின்று 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிய மாணவர்கள்

கர்நாடகா: பர்தா அணிந்து வந்த மாணவி..சுற்றி நின்று 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிய மாணவர்கள்
கர்நாடகா: பர்தா அணிந்து வந்த மாணவி..சுற்றி நின்று 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பிய மாணவர்கள்
Published on

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், இன்று அங்குள்ள ஒரு கல்லூரியில் பர்தா அணிந்து வந்த மாணவியை காவித் துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகளும், அவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பு மாணவர்களும் போராட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கர்நாடகாவில் உள்ள கல்விச் சாலைகள் அமைதியை இழந்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. நாள் முழுவதும் 'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் 'ஜெய் பீம்' ஆகிய கோஷங்கள் தான் கல்லூரிகளில் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வரும் சூழலில், இந்த பிரச்னையை முன்வைத்து நடைபெறும் போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன.

அந்த வகையில், கர்நாடகாவில் உள்ள மாண்டியா கல்லூரியில் இன்று காலை ஒரு முஸ்லிம் மாணவி பர்தா அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தார். அப்போது காவித் துண்டை அணிந்திருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த மாணவியை திடீரென சூழ்ந்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பினர். ஆனால், இத்தனை மாணவர்கள் தன்னை சூழ்ந்ததை கண்டு சிறிதும் அச்சப்படாத அந்த மாணவி, 'அல்லா ஹு அக்பர்' என உரக்க கோஷமிட்டவாறே கல்லூரியை நோக்கி முன்னேறினார். எனினும், அவரை விடாமல் மாணவர்கள் துரத்திச் சென்றனர். இதனைக் கண்ட கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்து அங்கிருந்த மாணவர்களை கலைந்து போக செய்தனர்.

இதேபோல, உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. பின்னர், போலீஸார் அங்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஹிஜாபுக்கு அனுமதி இல்லை - மத்திய பிரதேச அமைச்சர்

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பார்மர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹிஜாப் என்பது பள்ளிச் சீருடைகளில் ஒரு அங்கம் கிடையாது. எனவே, ஹிஜாபை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. மத்திய பிரதேசத்தில் பள்ளிச் சீருடை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கேற்ப இந்த விவகாரத்தில் மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்" என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com