டெல்லியில் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணைத் தர மறுத்த பெண்ணை திருடன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா முழுவதும் மே 31 ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் அமலிலிருந்து வருகிறது. எனினும் இந்த 4 ஆம் கட்ட பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் போக்குவரத்து சேவையும், மதுபான விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழுத் தளர்வுகள் வரவில்லை என்றாலும் இப்போதே டெல்லியில் ஆங்காங்கே குற்றச்சம்பவங்களும் தலைதூக்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் திருடன் ஒருவனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்துள்ள புகாரின்படி பார்த்தால் அந்தத் திருடனின் பெயர் சோனு என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண் அளித்துள்ள புகாரின்படி சம்பவம் நிகழ்ந்த தினத்தில் மேல்மாடத்தில் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது முகமூடி அணிந்திருந்த ஒருவன் என்னை மிரட்டி என்னிடம் உள்ள விலை உயர்ந்த பொருள்களைக் கேட்டான். பின்பு என்னுடைய ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணைக் கேட்டான். அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அதற்குக் கடுமையாகத் தாக்கிய அந்தத் திருடன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறியுள்ளார். பின்பு வேறு வழியின்றி ஏடிஎம் கார்டையும் ரகசிய எண்ணையும் பகிர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
திருடன் தாக்கியதால் கடுமையான வலியில் தவித்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்தத் திருடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்காக நான்கு தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர்.