நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 2வது அமர்வு நாளை தொடங்க உள்ளது.
நாளை நடக்க உள்ள அந்தக் கூட்டத்தில், மாநிலங்களவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் கடைபிடிக்கப்பட வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த எம்.பி.க்கள் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இக்கூட்டத்திற்கு பின் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு கல்வியை தொடர உதவுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார். விலைவாசி உயர்வு, பிஎஃப் வட்டிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.