2023-ன் நிதிநிலை அறிக்கையை எப்போது தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

2023-ன் நிதிநிலை அறிக்கையை எப்போது தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
2023-ன் நிதிநிலை அறிக்கையை எப்போது தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
Published on

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோருடன் ஆலோசனையை நடத்தியுள்ளார்.

ஜனவரி 31 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ தலைமையில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் தலைவர் உரையை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை அமர்வுகள் வழக்கப்படி பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பணிகள் விரைவில் முடிவடைந்தால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியை அங்கே நடத்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர்கள் விளக்கினர்.

ஏற்கனவே புனரமைக்கப்பட்ட ராஜ்பத் சாலை "கர்த்தவிய பத்" என்கிற புதிய பெயருடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வருட குடியரசு தின அணிவகுப்பு புனரமைக்கப்பட்ட பகுதியில் புதுப்பொலிவுடன் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அலங்கார ஊர்தியும் இந்த வருட அணிவகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருட நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று தாக்கல் செய்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த வருட பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை த் தேர்தலுக்குப் பின்னரே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள மத்திய அரசின் கடைசி முழுவீச்சான பட்ஜெட்டாக இந்த வருட நிதிநிலை அறிக்கை கருதப்படுகிறது.

இந்த வருட பட்ஜெட்டில் மத்திய அரசு மானியங்களை அதிகரித்து பல்வேறு சலுகைகளை சாமானிய மக்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிக்க மற்றொரு வாய்ப்பாக இந்த பட்ஜெட் இருக்கும் என கருதப்படுகிறது. இதைத் தவிர அடுத்த 25 வருடங்களுக்கு வலுவான பொருளாதாரம் வளர்ச்சியை உண்டாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகள் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் எனவும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி வருகிறார்.

ஆகவே இந்த வருட பட்ஜெட் மற்றும் வருடத்தின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களிலே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி ஆகியவற்றுக்கான தேதிகள் விரைவிலேயே இறுதி செய்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com