சமூக மற்றும் வளர்ச்சி திட்டங்கள் பலவற்றுக்காக, அரசு பொதுத்துறை நிறுவனங்களில், தனியார்மய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனியார் முதலீட்டை கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இன்று 2021 - 22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியது:
"அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது முக்கியம் மற்றும் முக்கியமற்ற துறைகளில் தனியார்மயத்துக்கான தெளிவான திட்டத்தை வழங்கும். தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், அரசின் உறுதியை நிறைவேற்ற, பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய கொள்கை கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் வரவுள்ளன.
2 வகை துறைகள் தனியார்மயமாக்கப்படவுள்ளன:
அ) முக்கிய துறை: குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும்; மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும்.
முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் துறைகள்:
> அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை
> போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு
> மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை
> வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை
ஆ) முக்கியமற்ற பிரிவு: இந்தப் பிரிவில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும், அல்லது மூடப்படும்.":