கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா, அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி. இவரின் 30 வயது மகளான சௌந்தர்யா, பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், மருத்துவரான நீரஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் பெங்களூரு வசந்த் நகரில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு 6 மாத குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல், சுமார் பத்து மணியளவில், வேலைக்காரப் பெண், சௌந்தர்யாவின் வீட்டுக் கதவை தட்டியுள்ளார். அப்போது, நெடுநேரமாகியும் கதவு திறக்காததால், சௌந்தர்யாவின் கணவர் நீரஜிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சௌந்தர்யாவுக்கு செல்ஃபோனில் தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்காததால், உடனடியாக வீட்டுக்கு வந்த நீரஜ், மாற்றுச் சாவியின் மூலம் வீட்டுக்கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது சௌந்தர்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நீரஜ், வேலைக்காரப் பெண் மற்றும் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு, தனியார் மருத்துவமனைக்கு மனைவி சௌந்தர்யாவை கொண்டு சென்றுள்ளார். ஆனால், சௌந்தர்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது பொளரிங் மருத்துவமனையில், சௌந்தர்யாவின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘சௌந்தர்யாவின் இறப்பால், அவரது குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ள இந்த நிலையில், கணவர் நீரஜ் உள்பட யாரிடமும் இன்னும் விசாரணையை துவக்கவில்லை என்று தெரிவித்தனர். சௌந்தர்யாவின் தற்கொலையை அறிந்து, தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் சில அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.
பேத்தியின் மரணத்தால் எடியூரப்பா மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், “சௌந்தர்யா, பிரசவத்திற்குப் பின்னான மன உளைச்சலில் இருந்தார். சௌந்தர்யாவுக்கு 4 மாத குழந்தை உள்ளது. இந்த சம்பவத்தில் எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லை. எங்கள் அனைவருக்குமே தெரியும், அவர் பிரசவத்திற்குப் பின்னான மன உளைச்சலில் இருந்தது. எடியூரப்பா மிகவும் கலங்கிப் போயுள்ளார். சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் இருவருமே மிகவும் நல்ல தம்பதிகள்” இவ்வாறு தெரிவித்தார். சௌந்தர்யாவின் தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழு தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.