குவாண்டம் இயக்கவியலை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான வெர்னர் ஹைசன்பெர்க் படத்திற்கு பதில் பிரபல வெப் சீரிஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகரின் படத்தை மாற்றி வைத்திருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
மாணவர்களோ, பொதுமக்களோ இந்த தவறை தெரியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வது சரியாகப்படலாம். ஆனால் இதனை செய்ததில் பாடம் கற்பிக்கும் பள்ளியில் நடந்திருக்கிறது என்பதுதான் சர்ச்சைக்கு வித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளியில்தான் இந்த மாபெரும் தவறை செய்திருக்கிறார்கள் என்பது வைரலான வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்றான பிரேக்கிங் பேட் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், இளைஞர்கள் பலருக்கு பிரசித்தமான ப்ரையன் க்ரான்ஸ்டன் படத்தைதான் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளரும், குவாண்டம் இயக்கவியலை கண்டுபிடித்த அறிவியலாளரில் ஒருவரான வெர்னர் ஹைசன்பெர்க்கின் படத்திற்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் பள்ளியில் செய்யப்பட்ட இந்த தவறு நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டிருக்கிறது.
பிரேக்கிங் பேட் சீரிஸில் வால்டெர் வொயிட் என்ற பெயரில் வேதியியல் ஆசிரியராக கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ப்ரையன் க்ரான்ஸ்டன், ஹைசன்பெர்க் என்ற போதைப்பொருளின் தலைவராகவும் அறியப்பட்டார்.
வால்டர் வொயிட் கதாப்பாத்திரத்தின் ஹைசன்பெர்க் பெயரும், ஜெர்மனி விஞ்ஞானியின் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் பள்ளியில் தவறு நேர்ந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இதனைக் கண்ட ட்விட்டர் வாசிகள், “uncertainity principle என்ற நிச்சயமற்ற கொள்கையை கண்டுபிடித்தவரை அப்பள்ளி ஆசிரியர் நிச்சயமாக அறிந்திருக்காததன் விளைவாகத்தான் இப்படி நடந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதேப்போன்று கடந்த 2019ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் அனந்தாபுர் மாவட்டத்தில் உள்ள பள்ளியிலும் ப்ரையன் க்ரான்ஸ்டனின் புகைப்படம் அறிவியல் அறிஞரின் படத்திற்கு பதிலாக வைக்கப்பட்டிருந்தது.