இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் 72 ஆவது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லி ராஜபாட்டையில் நடைபெறும் இவ்விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் ராப்பும் இந்த தகவலை உறுதிசெய்தனர்.
குடியரசு தினவிழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் ராப் அடுத்த ஆண்டு நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தாக தெரிவித்தார்.
மேலும், குடியரசுத் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்து தங்கள் நாட்டை கவுரவப்படுத்தியிருக்கிறது என்றும் டாமினிக் ராப் கூறினார். கடந்த முறை சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சோனரோ கலந்து கொண்டார்.