ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் தொடர்பாக புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்ஸிட் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாத காரணத்தால் பிரதமராக இருந்த தெரசா மே பதவி விலகினார். தெரசா மே பதவி விலகியதையடுத்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு பிரெக்ஸிட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். இதனையடுத்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மசோதா நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், புதிய ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக, பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் சனிக்கிழமை கூடுகிறது என்றும் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பிறகு பிரெக்ஸிட் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் நீண்ட காலம் இழுபறி நீடித்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக வெளியேறும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.