மத்திய பட்ஜெட் குறித்து நாளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவை பாஜக எம்.பிக்களுக்கு விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. `மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது’ என்று தெரிவித்த நிதியமைச்சர், ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம், கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னபடியே சுகாதாரம், விவசாயம், மருத்துவம், புதிய வருமான வரி முறை, பெண்கள் மற்றும் சேமிப்புத் திட்டங்கள், இந்திய ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக வேளாண் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி கடன், தேசிய டிஜிட்டல் நூலகம், மருத்துவத் துறையில் புதிய திட்டம், பழங்குடியினர் மேம்பாடு, மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன், 7.5 சதவிகித வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அவர், `புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை’ என்பதையும் தெரிவித்திருந்தார். இதனால் மத்திய பட்ஜெட்டுக்கு பல தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளை சேர்ந்த பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் நாளை விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நாளை காலை 9 மணிக்கு இந்த விளக்கக்கூட்டம் நடைபெறும் என அனைத்து பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒவ்வொருவருடைய நலனையும் மனதில் வைத்து, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இதை அந்தந்த தொகுதி எம்.பிக்கள் மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி மேலிடம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், நாளை அக்கட்சி எம்.பிக்களுக்கு இதுகுறித்து விளக்கக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.