அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் முதலிடம் பிடித்த டினா டாபி ஐ.ஏ.எஸ் ‘பிரிக்ஸ்’ சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி இளம் தலைவர்களுக்கான வழிநடத்தல் குழுவில் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘பிரிக்ஸ்’ என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட அமைப்பு. இதற்குதான், டினா டாபியை 2023-ஆம் ஆண்டுவரை கெளரவ ஆலோசகராக நியமித்துள்ளார்கள். அதற்கு, காரணம் அவரின் திறமையும் துடிப்பும் மிக்க செயல்பாடுகள்தான்.
“ஒரு சாதனையாளராக உங்கள் நிபுணத்துவம் உலகளாவிய சமூகத்தில், இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும். அதற்கு, ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள். உங்கள், வழிகாட்டுதல் எங்கள் நோக்கத்தை மேலும் உறுதியாக்கும் என்று நம்புகிறோம்” என பிரிக்ஸின் உதவி இயக்குனர் தீபங் சிங்கி உற்சாகத்துடன் டினா டாபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கணவர் ஆதார் அமீர்கானுடன் டினா டாபி
தற்போது, ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ்ஸாக பணியாற்றிக் கொண்டிருக்கும் டினா டாபியின் கணவர் ஆதார் அமீர்கானும் ஒரு ஐ.ஏ.எஸ்தான். இவர்களுடையது சுவாரஸ்யமான காதல் பின்னணியைக் கொண்டது. 2016 ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் டினா டாபி முதலிடமும், இவரது கணவர் ஆதார் அமீர்கான் இரண்டாவது இடமும் பிடித்தார்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ஆதார் அமீர்கானும் புத்தமத்தைச் சேர்ந்த டினா டாபியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் அமைப்பில் பொறுப்பேற்றுக்கொண்ட டினா டாபி, “இது ஒரு அருமையான வாய்ப்பு. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்பதால் இந்த, வாய்ப்பை அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக பயன்படுத்துவேன்” என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டுள்ளார்.