மும்பையிலுள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் திருட்டு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையிலுள்ள வருமான வரித் துறையின் ‘ஆயகார் பவன்’ அலுவலகத்தின் நான்காவது மாடியிலுள்ள அறையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளான செப்டம்பர் 2ஆம் தேதி அலுவலகத்திலுள்ள வருமான வரித்துறை அதிகாரி அல்கா தியாகியின் அறையின் அலமாறியின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனை அலுவலகத்தின் பாதுகாவலர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் அலமாறியிலிருந்த கோப்புகள் கலைந்து கிடைந்ததையும் அவர் பார்த்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையில் புகார் எதுவும் பதியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அல்கா தியாகி அவருடைய மேல் அதிகாரிக்கும் மட்டும் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த அறையிலுள்ள கோப்புகளை படம் எடுத்து ஏதாவது ஆவணங்கள் திருடப்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர். அத்துடன் சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த வருமான வரித்துறை அதிகாரி அல்கா தியாகி, தீபக் கோச்சர்-ஐசிஐசிஐ வழக்கு, அம்பானி குடும்பத்தின் கருப்பு பண வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு பிறகு மும்பை வருமான வரி அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு வரும் அனைவரின் அடையாள அட்டையையும் சரிபார்த்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.