உடலில் உள்ள முடிகளை அகற்றும் வாக்ஸிங் முறையின் போது தோல் உரிந்து வந்ததால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட ஸ்பா மீது நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்ததில் மத்திய பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் போய்து இந்தூரில் உள்ள ஸ்பாவில் நடந்திருக்கிறது. அதன்படி, சந்தன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் துல்சி நகரில் உள்ள பிரபல ஸ்பா சலூனுக்கு சென்று 4500 ரூபாய் மதிப்பிலான பிரேசிலியன் முறையிலான வாக்ஸிங் செய்ய சென்றிருக்கிறார்.
அங்கு முடியை அகற்றுவதற்கான மெழுகு மிகவும் சூடாக இருந்ததால் அது குறித்து தெரிவித்த போது, “வழக்கமாக செய்வதுதான். இதில் பயப்பட எதுவும் இல்லை” எனச் சொல்லி ஸ்பா ஊழியர் அந்த பெண்ணின் உடலில் வாக்ஸிங் ஸ்ட்ரிப்பை வைத்து சடாரென இழுத்திருக்கிறார். இதில் சூடு தாங்க முடியாததால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு பகுதியில் தோல் உரிந்து வந்திருக்கிறது.
வாக்ஸ் ரொம்பவே சூடாக இருப்பதாக சொல்லியும் ஸ்பா ஊழியர் உத்தரவாதம் கொடுத்து வாக்ஸிங் செய்ததால் தோல் உரிந்ததோடு, இதனால் பெண்ணுக்கு மிகுந்த எரிச்சலும் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியின் போது சலூனின் தவறான வாக்ஸிங் செயலுக்கு எதிராக நுகர்வோர் கோர்ட்டில் வழக்குப்பதிந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறது அந்த சலூன் நிர்வாகம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையற்ற வாக்ஸிங்கால் கடுமையான காயம் ஏற்பட்டதை உறுதிபடுத்திய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாடிக்கையாளர்களின் கவலைகளை கருத்தில்கொள்ள வேண்டியது சலூன் நிர்வாகத்தின் பொறுப்பு என்று கூறியதோடு, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாக்ஸிங் செய்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து தவறு ஸ்பா சலூன் தரப்பு மீது இருப்பது உறுதியானதால், வாக்ஸிங்கால் ஆன இழப்புக்கு ரூ.30,000 , இதனால் அப்பெண்ணுக்கு உண்டான மன வேதனைக்கு ரூ.20,000, மருத்துவ பரிசோதனைக்கு ரூ.20,000 என 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அடுத்த 30 நாட்களுக்குள் இதனை கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், வாக்ஸிங்கால் சலூன் ஸ்பாக்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசியுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பல்ராஜ் குமார் பலோடா, “கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று 4 சலூன், ஸ்பாக்களுக்கும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 15 அழகு நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றிருக்கிறார்.