நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளே 70% வாக்குகள் பதிவாக முக்கிய காரணமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை என சுமார் 65 ஆயிரம் வீரர்களும், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லையொட்டிய பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி முதல் கட்ட தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். தண்டேவாடா பகுதியில் ஓரிடத்தில் குண்டு ஒன்று வெடித்தது. நக்சல் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இடங்களில் அவர்களில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 70% வாக்குகள் பதிவாகி இருப்பது பாராட்டுக்குரியது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் செய்யப்பட்ட பலத்த பாதுகாப்பே மக்களின் நம்பிக்கையை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமின்றி வயதானவர்களையும், உடல் ஊனமுற்றவர்களையும் கூட வாக்களிக்க அழைத்து வந்து மத்திய துணை ராணுவப் படையினர் அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஒவ்வொரு வாக்குக்கும் பாதுகாப்பு படை வீரர்கள் முக்கியத்துவம் கொடுத்ததாகவும், முடிந்தவரை அனைவரையும் அவர்கள் வாக்களித்த வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.