கேரள ஊடகங்களில் டாப் நியூஸ் ஆன சிறுவன் சுனில் - வறுமைக்கு நடுவில் வெளிப்பட்ட வீரம்

கேரள ஊடகங்களில் டாப் நியூஸ் ஆன சிறுவன் சுனில் - வறுமைக்கு நடுவில் வெளிப்பட்ட வீரம்
கேரள ஊடகங்களில் டாப் நியூஸ் ஆன சிறுவன் சுனில் - வறுமைக்கு நடுவில் வெளிப்பட்ட வீரம்
Published on

பெரிய ஹீரோவாக மாறி இருக்கிறான் சிறுவன் சுனில். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செருகோட் கிராமத்தில் இன்றைய தேதிக்கு இவன்தான் ஹீரோ. ஆகவே சுனிலை பற்றி கேரள சமூக ஊடகங்கள் வைரலாக தகவலை பரப்பி வருகின்றன. ஒரே நாளில் ஹீரோவாக மாறியிருக்கும் சிறுவன் சுனில் அப்படி என்ன செய்தான்?

பெரிய கின்னஸ் சாதனையில் எல்லாம் ஈடுபடவில்லை சுனில். கண்ணுக்கு முன்னால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறான். ஆகவேதான் அவன் டாக் ஆப் த டவுனாக மாறி இருக்கிறான். சரி, என்ன நடந்தது?

அதிகாலை வழக்கம் போல தூங்கி எழுந்திருக்கிறான் சிறுவன் சுனில். விழித்து வெளியில் வந்து பார்த்திருக்கிறான். அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குழந்தை சைக்கிளை மிதித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தை சைக்கிளை மிதித்த வேகத்தில் அருகே இருந்த குளத்தில் போய் விழுந்துள்ளது. அப்படியே மெள்ள மெள்ள அக்குழந்தை மூழ்கி உயிருக்குப் போராடி உள்ளது. அதை பார்த்த சுனில், கொஞ்சமும் யோசிக்காமல் குளத்தில் குதித்து குழந்தையை மீட்க முயன்றிருக்கிறார். அந்தச் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுனிலின் மாமா பதறிப் போய் அவரும் குளத்தில் குதித்து குழந்தையை சுனிலுடன் சேர்த்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்தத் தகவல் உடனே ஊர் முழுக்க பரவி உள்ளது. அடுத்த நொடி கிராமமே திரண்டு சுனில் வீட்டிற்கு முன் குவிந்துவிட்டனர். இதுவரை ஊரில் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வந்த சுனில் ஹீரோவாக மாறி இருக்கிறார்.

இந்தச் சாதனையை செய்த சிறுவன் சுனில், தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அந்தச் செய்தி அவனது பள்ளிக்கும் பரவி இருக்கிறது. அடுத்த நாள் திங்கட்கிழமை பள்ளிக்கு வர இருக்கும் சுனிலுக்கு பெரிய வரவேற்பு கொடுக்க பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் காத்திருந்தனர். ஆனால் சுனில் அன்று பள்ளிக்குப் போகவில்லை. உடனே வீட்டை விசாரித்து மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து குவிந்துவிட்டனர். ஆனால் தேடிப் போய் பார்த்த சுனிலை அவர்களால் சந்தோஷமாக உற்சாகப்படுத்த முடியவில்லை. அவனது வீடு சின்ன குடிசையாக இருந்தது. அந்த வீட்டில் இரண்டு சகோதரகள் மற்றும் சகோதரி உடன் அம்மாவும் பாட்டியும் வாழ்ந்து வருவதை அறிந்த போது வருத்தம் அவர்களை வாட்டி வதைத்துள்ளது. 

சுனிலின் பாட்டி குறி பார்க்கும் தொழில் செய்கிறார். அம்மா கத்தி விற்பனை செய்கிறார். ஏறக்குறைய நாடோடி சமூகத்தை சார்ந்த சுனிலின் குடும்பம் ஊரில் ஒரு ஓரமாக குடிசை போட்டு வாழ்ந்து வருகிறது. இந்த வறுமை நிலையிலும் இந்தப் பையன் தன் படிப்பை மேற்கொண்டு வருகிறான் என அறிந்த ஆசிரியர்கள் சுனிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இதுவரை அடையாளமே இல்லாமல் இருந்த சுனில் ஒரு குழந்தையை காப்பாற்றியதன் மூலம் இன்று மலையாள பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாக மாறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com