கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பொருனன் ராஜன் (Porunnan Rajan). 55 வயதான ராஜன் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரஜனி. ராஜனுக்கு லாட்டரி வாங்குவது பழக்கம். பல முறை லாட்டரி வாங்கியும் ராஜனுக்கு ஜாக்பாட் அடிக்கவில்லை. ஆனால் தான் வாங்கும் சொற்ப கூலியையும், லாட்டரிக்கே செலவழித்து வந்துள்ளார் ராஜன். இதனை மனைவி ரஜனி பல முறை கண்டித்தபோதும், அதைக் கண்டு கொள்ளாமல் லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் ராஜன்.
இவர் ஒரு கூலித் தொழிலாளி என்பதால் தனது தேவைகளுக்காக வங்கியில் மூன்று முறை கடன் வாங்கியுள்ளார். அப்படி தான் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்துவதற்காகவும், தனது தேவைக்காக நான்காவது முறையாக வங்கியில் கடன் வாங்குவதற்காகவும் கேரள மாநிலம் கூத்தப்பரம்பாவில் உள்ள வங்கிக்கு சென்றிருக்கிறார். ஆனால் வழியிலேயே ராஜனுக்கு லாட்டரி மோகம் தொற்றிக்கொண்டது. இதனால் வங்கிக்கு செல்லும் வழியில் இருக்கும் கடையொன்றில் ரூ.300-க்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரிக்கு ரூ. 12 கோடி விழுந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனைக் கேள்விப்பட்ட ராஜன் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் எண்ணை அடுத்த நாளே அருகில் உள்ள கடைக்குச் சென்று சரி பார்த்திருக்கிறார். செய்திதாளைப் பார்த்த ராஜனுக்கு தலைகால் புரியவில்லை, காரணம் அந்த எண்ணும் அவரது லாட்டரி எண்ணும் ஒன்றாக இருந்தது, ராஜனுக்கு அடித்தது ஜாக்பாட். இப்போது ராஜன் ரூ. 12 கோடிக்கு அதிபதி.
இது குறித்து ராஜன் கூறும் போது “ எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பரிசு மூலம் நான் வங்கியில் வாங்கிய கடனான ரூ. 7 லட்சத்தை அடைத்து விடுவேன். மேலும் இந்தத் தொகையின் மூலம் எனது இளைய மகள் அதிராவின் கல்வியை எந்த தடையுமின்றி தொடர முடியும், மேலும் என்னைப் போல் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவேன் என்றும் கூறினார். இது மட்டுமல்லாமல் எனக்கு உதவுவதற்காக பாதியில் படிப்பை நிறுத்திய எனது மகன் ரிஜிலின் மேற்படிப்பை தொடர முடியும் " என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.