லக்கிம்பூர் கேரி விவகாரத்தில், “மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யவேண்டும்” என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (புதன்கிழமை) முடங்கின.
லக்கிம்பூர் கேரி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணையின் முடிவில் விவசாயிகள் மீது வாகனங்கள் மோதியது திட்டமிட்ட சதி என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
லக்கிம்பூர் கேரியில் வாகனங்கள் மோதி 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு தொடர சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரைத்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 14 நபர்கள் தற்போது சிறையில் உள்ளனர். இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீதான வழக்கு வலுப்படுவதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “மத்திய அரசு இவ்விஷயத்தில் ஓடி ஒளிகின்றது. விவாதத்துக்கு முன்வரவில்லை. ஆஷிஷ் மிஸ்ரா இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். அவரது தந்தை அஜய் மிஸ்ரா குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் அஜய் மிஸ்ராவை தனது அமைச்சரவையில் வைத்துள்ளார்?” என அவையில் வினவினார்.
இதை ஆமோதித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் ‘ஆஷிஷ் மிஸ்ராவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. உயிரிழந்தோருக்கு நியாயம் கிடைக்க அஜய் மிஸ்ரா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆரம்பம் முதலே விசாரணையை நீர்த்துப்போக செய்ய தொடர்முயற்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இவற்றுடன், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் தொடர்பாகவும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா, ‘12 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படவேண்டும்’ என அளித்த தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தால், எதிர்க்கட்சிகள் தொடர்முழக்கங்கள் மூலம் மாநிலங்களவையை முடங்கின. இன்று ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்க்கட்சிகள் 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து நடத்த திட்டமிட்டுருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில், லக்கிம்பூர் கேரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் பேரணி
அடுத்த வருடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆசிஷ் மிஸ்ரா விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக பேசப்படும் என அந்த மாநில அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வரும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து தொடர்ந்து அரசியல் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
- கணபதி சுப்ரமணியம்