சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா என்று அவர்களது பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 56 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், மேலும்2300-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 26 ஆம் தேதி தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் பிறந்த ஆண் குழந்தைக்கு கோவிட் எனவும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயர் வைத்துள்ளனர். இது குறித்துப் பேட்டியளித்துள்ள இரட்டை குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி "என்னுடைய பிரசவம் கடும் நெருக்கடியில் நிகழ்ந்ததால், இந்நாளை மற்ற முடியாத நாளாக மாற்ற வேண்டும் என என்னுடைய கணவர் விரும்பினார்" என்றார்.
மேலும் தொடர்ந்த ப்ரீத்தி "இந்த வைரஸ் பல உயிர்களைப் பலிவாங்கி வருகிறது. ஆனால் இதன் மூலம் மக்கள் சுகாதாரத்தை இப்போது பின்பற்றி வருகின்றனர். அதனால்தான் இந்தப் பெயரை நாங்கள் வைத்தோம். குழந்தை பிறந்தபோது மருத்துவமனை பணியாளர்கள் அவர்களை கோவிட், கொரோனா என்று அழைத்தனர், ஆகவே இந்தப் பெயரைச் சூட்டினோம். ஆனால் எதிர்காலத்தில் குழந்தைகளின் பெயர்களை மாற்றிவிடுவோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தியின் பிரசவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் " திடீரென ஏற்பட்ட பிரசவ வலியின் காரணமாக அந்தப் பெண் மார்ச் 26 ஆம் தேதி ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்ததும் 45 நிமிடங்களில் அவருக்கு அழகான இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஊரடங்கு காலத்திலும் மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்" என்றார் அவர்.