மகாரஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்ற கடந்த 2022ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2023, ஜூலை மாதத்தில் அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத்தின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர், தாராஷிவ் என மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்து அனுமதி அளித்தது. இதையடுத்து இரு நகரங்களின் பெயரை மாற்றி மகாராஷ்டிர அரசும் அரசாணை வெளியிட்டது. இதற்கிடையே பெயர் மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் மக்கள் பலர், பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மராட்டிய அரசு, ”இந்த விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்பிற்காக மட்டுமே பெயர் மாற்றப்படுவதாகவும், வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதிகள் டி.கே.உபாத்யாயா, ஆரிஃப் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மாநில அரசின் அறிவிப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இரு நகரங்களின் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இல்லை என்பதால், அரசுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.