கடந்தமாதம் சென்னையைச்சுற்றியுள்ள சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதனால் பீதியடைந்த பள்ளிகள் குழந்தைகளை பாதுகாப்பாக பெற்றோரிகளிடம் ஒப்படைத்தது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது டெல்லியை சுற்றியுள்ள 130 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து, டெல்லி போலிசார், மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பள்ளிகளில் வெடிகுண்டு ஏதுவும் இல்லாததால் இது வெறும் புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.
இருப்பினும், பள்ளிகளுக்கு மிரட்டல் விடுவித்த அந்த மர்ம நபர் யார் என்ற தேடுதலில் போலிசார் இறங்கினர். சென்னையைப்போலவே டெல்லி பள்ளிகளுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து (sawariim@mail.ru) ஒரே சமயத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மிரட்டல் வந்திருப்பது போலிசாரின் கவனத்தைப்பெற்றது.
மின்னஞ்சலை ஆராய்ந்த போலிசார், "sariim@mail.ru என்ற மின்னஞ்சல் ஐடியின் டொமைன் ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் இது சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும் கூறுகின்றனர்.
காரணம், ‘சவாரிம்’ என்ற முகவரியைக்கொண்ட இந்த மின்னஞ்சலானது தனிநபருடையதாக இருக்காது, இது ஒரு பயங்கரவாத குழுவின் (ஐஎஸ்) அமைப்பைக்கொண்ட முகவரியாக இருக்கலாம். ஏனெனில் சவாரிம் என்ற அரபு வார்த்தையை ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தும் வார்த்தையாகும்.
ஆகவே இந்த வார்த்தையைப்பயன்படுத்தி, ஒரு போலியான மின்னஞ்சல் உருவாக்கி அதை ரஷ்யாவிலிருந்து செயல் படுத்துவதுபோல, இந்தியாவிற்கு பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று போலிசார் சந்தேகம் எழுப்புகின்றனர்.