கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பஸ்வேஸ்வர நகர், யலங்கா, சர்ஜாபுரம், பண்ணேற்கட்டா ஆனைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 28 பள்ளிகளுக்கு இ- மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டுமிரட்டல் விடுத்துள்ளனர். இந்தப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட, வெடிகுண்டுகள் "எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்" எனக் கூறப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினர் மற்றும் போலீசார், பள்ளி குழந்தைகளை அப்புறப்படுத்திப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி வளாகம், கழிவறை எனப் பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்களைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஒரே நேரத்தில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.