நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று, இன்டிகோ, விஸ்தாரா, ஆகாசா ஏர், ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களைச் சேர்ந்த 24 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
எனினும் சோதனையில் அவை அனைத்துமே வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது. இந்த வாரம் மட்டும் 90க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் புரளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது. மிரட்டல் அழைப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” என்று அமைச்சர் ராம் மோகன் உறுதி அளித்தார்.