ஆந்திராவில் கஞ்சா விற்பனை செய்பவரை கைது செய்யச் சென்ற சென்னை காவல் துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 3 பேரை கைது செய்த ஆந்திர காவல் துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து விசாரணை செய்ததில், ஆந்திராவை சேர்ந்த ஹரி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் சுதாகர், 2 காவலர்கள், 3 ஊர்க்காவல் படையினருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே பேடிலிங்கலுபாடு என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு இருந்த 10 நபர்களை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்த நிலையில், காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது காவல் துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமை காவலர் வெயிலு முத்து மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர் என 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தடா காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தடா காவல் துறையினர் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த முரளி (26), செங்கல்பட்டு ஓட்டேரியை சேர்ந்த நரேஷ்குமார் (29), டில்லி (18) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் சுதாகர், மேலதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக காவல் நிலையத்திலிருந்து 9எம்எம் கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை எடுத்துக் கொண்டு தனியார் இன்னோவா காரில் ஆந்திராவுக்கு சென்றுள்ளார்.
அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் உதவி ஆய்வாளர் சுதாகருக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளதாகவும், முதல்நிலை காவலர் வெயிலு முத்துக்கு வலது கால் கணுக்கால் பகுதியில் சுமார் ஒரு இன்ச் அளவிற்கு ஆழமான சிறிய வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை கொளத்தூர் பகுதியில் நகைக்கடை கொள்ளையனை ராஜஸ்தான் மாநிலத்தில் பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டு கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் வந்ததாக ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.