இமாச்சலப்பிரதேசம் கஷாங் பகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் சென்றுகொண்டிருந்த கார் தீடீரென மலையில் இருந்து சட்லெஜ் நதியில் விழுந்தது. இதில் பெரும் விபத்து ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்ற இவ்விபத்து தொடர்பாக தமிழக காவல்துறைக்கு இமாச்சல காவல்துறையினர் தகவல் அளித்தனர். மேலும், விபத்துள்ளான காரை ஓட்டிய ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அதேநேரத்தில், காரில் பயணித்த வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அம்மாநில காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், அவரைத் தேடும் பணியில் காவல் துறை ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இத்தகவல் அறிந்து தந்தை சைதை துரைசாமி அங்கு சென்றார். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதாகவும் அவர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு இமாச்சல் காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைதை துரைசாமி கூறினார். மேலும், ’மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்’ எனவும் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.
ஆயினும் விபத்து நடைபெற்றது முதல் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாய் இருந்தன. காவல்துறை, ராணுவம், விமானப் படை வீரர்கள் ஒருபுறமும், ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஆற்றில் நீந்தியும் வெற்றி துரைசாமியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் எடை கொண்ட உருவ பொம்மையை விபத்து நடந்த பகுதியில் உள்ள ஆற்றில்விட்டு, அதன் போக்கை மீட்புப்படை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதற்கிடையே ஒரு பாறையில் ரத்தக்கறை படிந்த மனித மூளையின் திசுக்கள் ஒட்டியிருந்தது கண்டறியப்பட்டது. அதைச் சேகரித்து, அது வெற்றி சைதை துரைசாமியின் உடையதா என்பதைக் கண்டுபிக்க டிஎன்ஏ சோதனைக்கும் அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.12) எட்டாவது நாளாக விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனக்குப் பின் தமிழ்நாடு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ’வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும்’ என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெற்றி துரைசாமியின் உடலை கண்டறியும் தேடுதல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த அமித் குமார் ஷர்மா ஐ.பி.எஸ் பேட்டியில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி, தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தைக் கவனித்து வந்தபடியே, `என்றாவது ஒரு நாள்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காக, நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருந்த போதுதான், இந்த விபத்து ஏற்பட்டு அவர் மரணத்தைத் தழுவியுள்ளார்.