அந்தமான் நிகோபார் தீவிற்கு அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் ஏன் சென்றார்? அவரை அழைத்து சென்றவர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தமான் நிகோபார் தீவின் சென்டினல் தீவு பகுதியில் பழங்குடியினர் சிலர் வெளி உலக தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இன்றளவும் வசித்து வருகின்றனர். வெளியாட்கள் யாரேனும் தங்கள் பகுதிக்குள் வந்தால் அவர்கள் மூர்க்கமாக தாக்குவார்கள். வெளியாட்களை அவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க இளைஞர் ஒருவர் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஜான் ஆலன் பழங்குடியினரை கிறிஸ்தவத்திற்கு மாற்ற முயன்றதால் வெறுப்படைந்த அவர்கள் ஜானை அம்பு எய்தி கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
சொற்பமான மக்கள் மட்டுமே கொண்ட அந்தப் பழங்குடியின குழுவை சந்திக்க அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் ஆலன் (27) என்பவர், அங்கு கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். யாருமே செல்ல அச்சப்படுகின்ற அந்த இடத்திற்கு அந்தமான் பகுதியில் உள்ள சில மீனவர்களிடம் ரூ25 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து அழைத்து போக சொல்லி இருக்கிறார். அவர்கள் சென்டினல் தீவின் எல்லைப் பகுதி வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தனர். அந்தத் தீவிற்குள் சென்ற ஜான் ஆலன் மாயமானார்.
இதனிடையே, அமெரிக்க கவுன்சில் ஜென்ரலிடம் இருந்து அந்தமான் போலீசாருக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், சென்டினல் தீவிற்கு சென்ற தன்னுடைய மகன், அங்குள்ள மக்களால் தாக்கப்பட்டுள்ளதாக தங்களிடம் கூறியுள்ளார் என அந்த மெயிலில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, ஆலன் மாயமானதாக புகார் பதிவு செய்த போலீசார், அவர் பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். இதனையடுத்து, அந்தமான் சென்ற போலீசார், ஜான் ஆலனை அந்தத் தீவிற்கு அழைத்துச் சென்ற மீனவர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். ‘நவம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மீனவர்கள் படகில் கிளம்பி நள்ளிரவில் அந்தத் தீவு கரைக்கு சென்றோம். மறுநாள் காலை ஆலனை தீவின் கரையில் விட்டுவிட்டு வந்துவிட்டோம்” என போலீசாரிடம் மீனவர்கள் கூறினர்.
பின்னர், நவம்பர் 17 ஆம் தேதி தீவின் கரையில் பழங்குடியிட மக்கள் ஒருவரை எரித்ததை மீனவர்கள் பார்த்துள்ளனர். எரிக்கப்பட்ட சடலம் ஜான் ஆலம் போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர், ஜான் ஆலனின் நண்பர் அலெக்ஸாண்டரிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல் அலெக்ஸாண்டர் மூலம் அமெரிக்காவில் உள்ள ஜான் ஆலம் தாய்க்கு சென்றுள்ளது.
வெளியாட்கள் வந்தால் அந்தப் பழங்குடியின மக்கள் கொன்றுவிடுவார்கள் எனத் தெரிந்தும் மீனவர்கள் ஆலனுடன் அந்தத் தீவிற்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, ஜான் ஆலனை அழைத்துச் சென்ற மீனவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜான் ஆலன் சாவ் குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், “ஜான் ஆலன் சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்தி எங்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. ஜான் ஆலன் மிகவும் அன்பானவர். கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். கடவுள் மீது அன்பு கொண்டவர். அந்தத் தீவில் உள்ள மக்கள் மீதுள்ள நேசத்தால் அங்கு சென்றுள்ளார். அவரை கொன்றதாக கூறப்படுபவர்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். ஆலனுக்கு உதவிய நண்பர்களையும் விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சென்டினல் தீவில்தான் கொல்லப்பட்டுவிட்டால், கடவுள் மீது கோபம் கொல்லவேண்டாம் என சொல்லிவிட்டு ஜான் ஆலன் புறப்பட்டுள்ளார். கொல்லப்படுவோம் என தெரிந்தே அவர் அங்கு சென்றுள்ளார். தீவில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு கத்தரிகோல், கால்பந்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்று சில நாட்கள் அவர்களுடன் பேச முயற்சித்துள்ளார். “என்னுடைய பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். ஜீசஸ் உங்களை நேசிப்பார்” என அவர்களிடம் கூறியுள்ளார். பழங்குடி மக்களுடன் பேச முயற்சித்தது தொடர்பாக சில குறிப்புகளை அவர் டைரியில் எழுதியுள்ளார். பின்னர், தன்னை விட வந்த மீனவர்களிடம் அந்தக் குறிப்புகளை கொடுத்தனுப்பியுள்ளார். ஆனால், ஜான் ஆலன் அந்த மக்களால் அம்புகள் எய்யப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார்.
இதனை, ஜான் ஆலனின் உடலை கண்டுபிடிக்க இரண்டு முறை ஹெலிகாப்டரில் பார்வையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. மானுடவியலாளர்கள் மற்றும் பழங்குடியின வரலாற்று நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.