முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
டிசம்பர் 8ஆம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். டெல்லி கொண்டு செல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டது. தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாஆகியோரது உடல்கள் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இசைக்கருவிகளுடன் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது வந்தே மாதரம் என முழக்கமிட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்தராகண்டில் இருந்து பலர் வருகை தந்தனர்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம் மற்று வங்கதேச ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தியபின் வாத்தியங்கள் முழங்க இதய அஞ்சலியும், தொடர்ந்து மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் ராவத்தின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் பிபின் ராவத் மற்றும் மதுலிகாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் உடல்கள் தகன மேடைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. பிபின் ராவத்தின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவின் உடல்கள் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டது. பிபின் ராவத் மகள்கள் இறுதிச்சடங்கு செய்தனர். அதன்பின்னர் 17 சுற்று குண்டுகள் முழங்க 800 ராணுவ வீரர்களின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.