புதுச்சேரியில் நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்ததால் கடல் நீர் உள்ளே புகுந்ததையடுத்து 4 மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரது கணவர் நடராஜன், அதே பகுதியை சேர்ந்த முருகன், அஞ்சாப்புலி, சிலம்பரசன் ஆகியோர் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். தேங்காய்த்திட்டு துறைமுகத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது படகு லேசாக அடிபட்டது. ஆனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு திடீரேன படகுக்குள் ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகில் இருந்த தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனர். ஆனாலும் கடல் நீர் வேகமாக உள்ளே வரத்தொடங்கியுள்ள்து. இதையடுத்து படகை கரையோரமாக இயக்கினர். நீர் வரத்து அதிகமானதால் படகில் இருந்து கடலில் குதித்து நீந்தியே கரை சேர்ந்தனர். மேலும் படகும் கடலூர்-புதுச்சேரி இடையில் உள்ள புதுக்குப்பம் கிராம கடலோர கரையில் ஒதுங்கியது. படகில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.