புலந்த்ஷர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை மற்றும் வன்முறை சம்பவத்தில் கைதானவர்கள் ஜாமினில் விடுவிக்கப் பட்டதற்கு, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹ்வா கிராமத்தின் வனப்பகுதியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோத பசுவதைக்கூடம் செயல்படுவதாகக் கூறி கிராமத்திற்குள் திரண்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரியும் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஷிகர் அகர்வால், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சனிக்கிழமை இரவு சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்ற இந்து அமைப்பினர், ’பாரத மாதா கீ ஜே’, ’வந்தே மாதரம்’ என கோஷமிட்ட னர். பின்னர் அவர்கள் அருகில் நின்று இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங் களில் வைரலானது.
இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனை வி ரஜினி சிங் கூறியுள்ளார். ’’எந்த அடிப்படையில் இவர்களுக்கு விரைவாக ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. என் கணவரைக் கொன்றவர்களுக்கு இவ்வளவு விரைவாக ஜாமின் வழங்கியிருக்கக் கூடாது. அவர்களது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவர்களைப் போன்றவர்கள் இந்தச் சமூகத்தில் வாழக் கூடாது. இவர்கள் வெளியே வந்திருப்பதால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.