ப்ளூவேல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தயாரிக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பொன்னையன் என்பவர் ப்ளுவேல் விளையாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ப்ளூவேல் விளையாட்டுக்கு நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்து. இதுகுறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ப்ளூவேல் விளையாட்டின் தீங்குகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் என தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ப்ரைம்டைம் எனப்படும் நேரத்தில் 10 நிமிடங்கள் தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெற்றோர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய விளையாட்டு ப்ளூவேல். இந்த விளையாட்டால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்தது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு இந்த விளையாட்டால் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்தது. ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் சவால்களை பங்கேற்பாளர்கள் முடிக்க வேண்டும். தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும் செல்போனில் விளையாடப்படும் இந்த விளையாட்டில் குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் வரும் கட்டளைகள் கடுமையாக இருக்கும். விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இந்த விளையாட்டின் குரூர நோக்கம்.