உத்தரபிரதேச மாநிலத்தில் ப்ளூ வேல் விளையாடியதாகக் கூறப்படும் 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ப்ளூவேல் எனப்படும் நீல திமிங்கல விளையாட்டில் மொத்தம் 50 நிலைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து விளையாட்டினுள் உள்ளே செல்பவர்களை, கிட்டதட்ட விளையாட்டுக்கு அடிமையாக்கி கட்டளையை நிறைவேற்றும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றனர். உடலை கத்தியால் கிழித்து கொள்வது, கூர்மையான பொருள்களை கொண்டு கையில் ப்ளூவேல் வரைவது, நடுநிசியில் சுடுகாட்டுக்கு செல்வது, பேய் படம் பார்ப்பது, தண்டவாளத்தில் தனியாக நடந்துசெல்ல கூறுவது உள்ளிட்ட கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
இந்த கட்டளைகளை செய்ய மறுத்து விளையாட்டை பாதியில் முடித்து கொள்வதாகக் கூறினால் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வெளியே தெரிவித்து விடுவோம் என்று மிரட்டல்கள் வரும். இதற்கு பயந்து விளையாடி ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மாணவன் ப்ளூவேல் விளையாட்டை விளையாடியதால் தான் இறந்ததாக அவனது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இளைஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த விளையாட்டிற்கான இணையதளத்தை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று சமூக வலைதளங்களில் இருந்து இந்த விளையாட்டிற்கான லிங்குகளை உடனடியாக நீக்கவும் மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.