உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், நேற்று (பிப்ரவரி 27) அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
403 உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு 252 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி மற்றும் அப்னா தல் - சோநேலால் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவின் ஏழு மாநிலங்களவை வேட்பாளர்கள் வெற்றி பெறலாம் என்ற நிலையில், சமாஜ்வாதி கட்சியின் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு நடைபெற்ற பத்து இடங்களில் பாரதிய ஜனதா கட்சி எட்டு இடங்களை கைப்பற்றியது. உத்தரப்பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி கட்சிக்கு 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி மூன்று இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தபடி மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு வேட்பாளரை களம் இறக்கியதால் குழப்பம் நிகழுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் யாரும் பிற கட்சிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. மாறாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சோமசேகர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சிவராம் ஹெப்பார் வாக்களிக்கவில்லை.
உத்திரபிரதேசத்தில் ஒரு கூடுதல் இடம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் எதிர்பாராத வகையில் ஒரு இடம் என பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.