உத்தரப்பிரதேச மாநில பாஜக பெண் எம்.பி. சாவித்ரிபாய் புலே கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜக சமுதாயத்தில் பிரிவினையைத் தூண்டும் வகையில் நடந்துக்கொள்வதாகவும், அதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்
பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் சாவித்ரிபாய் பூலே, புத்த மதத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே, ஹனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது குறித்தும், ராமர் கோயில் விவகாரம் குறித்தும் சாவித்ரி தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல முகமது அலி ஜின்னாவை மிகச் சிறந்த தலைவர் மகாபுருஷர் என்று அவர் கூறியதற்கும் பாஜகவில் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த சாவித்ரிபாய் பூலே தான் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும் " தேச ஒற்றுமை குறித்து பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் மக்களிடையே மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் பிரிவினையைத் துண்டுவதை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுதான் பாஜகவின் அரசியல் கொள்கையாக உள்ளது. நமது நாட்டில் அரசமைப்புச் சட்டம்தான் காக்கப்பட வேண்டும். புதிய கோயில்கள் தேவையில்லை" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தி சாவித்ரி "உத்தரப்பிரதேச மாநில அரசு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை மோசமாகவே நடத்துகின்றன. ஹிந்துத்துவம் பேசி நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? பாஜகவில் இருந்துதான் விலகுகிறேனே தவிர, என்னுடைய எம்.பி. பதவியை தொடர்கிறேன். தொடர்ந்து பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்காக பாடுபவேன்" என தெரிவித்தார் அவர்.