நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2-வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக, மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் அங்கு சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்தத் தொகுதியில் 8 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். மற்ற 7 பேர் சுயேட்சைகள். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில், நிலேஷ் கும்பானி நிறுத்தப்பட்டார். ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக அதே காங்கிரஸ் கட்சியிலிருந்து மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்சலா அறிவிக்கப்பட்டார். அவருடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர்கள் சமர்ப்பித்த வேட்பு மனுக்களில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து இல்லாததாலேயே அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று மனுக்களை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலை எதிர்த்து வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக முதல் எம்பியைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பாபு மங்குகியா, “வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “சூரத்தில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. நமது ஜனநாயகம், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு - அனைத்தும் தலைமுறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. இது எங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்த பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலுக்கு, குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.