அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்தது. மீதமிருந்த 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தனர். அப்படி போட்டியின்றி வென்ற வேட்பாளர்கள் முதல்வர் பெமாகண்டுவும், துணை முதல்வர் சௌஹ்னா மெயின் ஆகியோரும் அடக்கம்.
இந்த 50 தொகுதிகளில் 36 இடங்களை பாஜக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே, 10 இடங்களில் போட்டியின் பெற்ற பாஜக, மொத்தமாக 46 தொகுதிகளை கைப்பற்றி அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை
பிடிக்கிறது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும் சூழலில் 46 தொகுதிகளை கைப்பற்றி அசுர பலத்தோடு 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை தொடர்கிறது.
அருணாச்சல பிரதேசத்தைப் பொருத்தவரை தேர்தலுக்கு முன்பாகவே 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், தேர்தலுக்கு முன்பாகவே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப்பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ள காரணத்தால் இன்று காலை முதலே பாஜக முன்னிலை வகித்தது.
கடந்த தேர்தலிலும் பாஜக அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருந்தனர். பெமா காண்டு இளம் முதல்வராக இருக்கும் நிலையில், இம்முறையும் அதே முதல்வர் பதவியில் தொடர்வாரா அல்லது மாற்றப்படுவாரா என்பதை கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என அம்மாநில பாஜகவினர் கூறி வருகின்றனர். அதேவேளையில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் அடுத்தடுத்த செயல்களில் அக்கட்சியினர் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இன்று மாலைக்குள் ஆளுநரை சந்திப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கட்சிகளான தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் அருணச்சல் மக்கள் கட்சி தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
அருணாச்சல் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்கள், மற்றும் அருணாச்சல் பாஜக பிரமுகர்களுக்கு நன்றியை கூறியுள்ளார்.. தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் வளர்ச்சிக்கு பாஜக உழைக்கும் என்றும், அருணாச்சல் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு பாஜக அழைத்துச் செல்லும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.