ரபேல் போர் விமானமும், தொடரும் சர்ச்சையும்

ரபேல் போர் விமானமும், தொடரும் சர்ச்சையும்
ரபேல் போர் விமானமும், தொடரும் சர்ச்சையும்
Published on

ரபேல் போர் விமான விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில் 2007ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் கோரியது. இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரிய பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. பறக்க தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது, மீதமுள்ள 108 விமானங்களை அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆனால், இது இறுதி செய்யப்படுவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக தலைமையிலான அரசு அமைந்தது. இந்த நிலையில் 2015இல் பிரான்ஸ் சென்ற மோடி, பறக்கத் தயாராக இருக்கும் 36 விமானங்களை உடனே வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு, 2016 ஆம் ஆண்டு முறைப்படி ஒப்பந்தமும் போடப்பட்டது. 

அப்போதே பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் அனுமதியின்றி மோடி எப்படி ஒப்பந்தத்தை இறுதி செய்தார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், கேபினட் கமிட்டி அளித்த ஒப்புதல் அடிப்படையில்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக பாஜக பதில் அளித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவது என ஒப்பந்தம் செய்த நிலையில் , பாஜக அரசு கூடுதல் விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டது ஏன் ? என்பதே காங்கிரஸ் எழுப்பும் கேள்வி. எனவே, விமானத்தின் விலை குறித்த விவரங்களை வெளியிட அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், போர் விமான ஒப்பந்தம் குறித்த விவரங்களை பகிரக்கூடாது என இரு நாடுகளிடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால், விலை உள்ளிட்ட தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. 

மேலும் ஏன் அரசின் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்ததில் இடம்பெறவில்லை, இந்த துறையில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் காங்கிரஸின் கேள்விகள். ஆனால் 2012ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலேயே தனியார் நிறுவனம் என கூறப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ்தான் இந்திய பொதுத் துறை நிறுவனத்தை மதிக்கவில்லை என்று பாஜக பதிலளிக்கிறது. ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை, ஆனால், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முழுமையான தகவல்களை அளித்திருப்பதால் எதிர்க்கட்சிகள் அதன் மூலமாகவே விவரங்களை தெரிந்து கொள்ளலாம், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்கிறது அரசு. 

ரபேல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பான சிவிசியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ஆனால், பிரதமருக்கு எதிராக சதி நடப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய அமைச்சர்கள் போட்டி போடுகிறார்கள் என காங்கிரஸ் பதிலுக்கு விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸின் பொய் பிரசாரத்தை முறியடித்து நாடு முழுவதும் சுற்றி வந்து ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்போம் என அரசு கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com