இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் 1948ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை இருந்து வந்தது. நேருவின் மறைவுக்கு பின்னர் தீன் மூர்த்தி வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் நிறுவப்பட்டது. மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இதன் துணைத் தலைவராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார்.
இந்நிலையில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் துணைத்தலைவராக இருக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடந்த சிறப்பு கூட்டத்தில், நேரு அருங்காட்சியகத்தின் பெயரில் உள்ள நேருவின் பெயரை நீக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகம் இனி பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயரில் இருந்த நேரு பெயர் நீக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாறு இல்லாதவர்கள் இப்போது மற்றவர்களின் வரலாற்றை அழிக்க முயல்கின்றனர். நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்றுவது என்பது மோசமான அணுகுமுறை. நவீன இந்தியாவின் சிற்பி மற்றும் ஜனநாயகத்தின் அச்சமற்ற கண்காணிப்பாளரான பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆளுமையை இதன் மூலம் குறைத்துவிட முடியாது. இது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ்த்தரமான மனநிலையையும் சர்வாதிகாரப் போக்கையும் காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் குறுகிய சிந்தனையால் இந்தியாவுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கிய பெரும் பங்களிப்பை குறைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்,பி.யும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவு சார் அடையாளமாகவும், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களின் புதையல் தீவாகவும் இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனத்துக்கு பதில் கொடுத்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை பிரதமரின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்ததன் மூலம் அனைவரும் கவுரவிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். ''காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஒரு பரம்பரைக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்து நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமரின் அருங்காட்சியகம் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சியாகும். அதை உண்மையாக்கும் தொலைநோக்குப் பார்வை காங்கிரசுக்கு இல்லை.
ஒரு குடும்பத்தின் பாரம்பரியம் மட்டுமே உயிர்ப்பித்து இருக்க வேண்டும். மற்ற பிரதமர்களின் மரபுகளை துடைத்தெறிவதே காங்கிரஸின் அணுகுமுறையாக உள்ளது. பிரதமர் அருங்காட்சியகத்தால் ஒவ்வொரு பிரதமருக்கும் மரியாதை ஏற்படுகிறது'' என்று நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் எம்பியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகரின் ட்விட்டர் பதிவில், ''எனது தந்தை முன்னாள் பிரதமருமான சந்திரசேகர் எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர். அவரும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரதமர்களையும் பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்து இருக்கிறார். இதனால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது காங்கிரசின் மோசமான அணுகுமுறை'' என்று குறிப்பிட்டுள்ளார்.