பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் வாட்ச் மிகவும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான பில்லை காண்பிக்குமாறு பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாகவும், ரஃபேல் வாட்ச் குறித்த விவரத்தை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார் அண்ணாமலை. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஃபேல் வாட்ச் உடைய பில்லை பொதுவெளியில் காண்பித்தார்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரின் சொத்து விவரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார் . தற்போது வெளியிடப்பட்டது திமுகவினரின் குடும்ப சொத்துகள்தான் எனவும் , கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் குறித்து விரைவில் பார்ட் -2 வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், ''நேற்று காலை தொடங்கி அகில இந்திய அளவில் 28 மணிநேரமாக Dmkfiles என்பது டிரெண்ட் ஆகி வருகிறது.
காவல் பணியில் இருந்தபோது லஞ்சப் பணத்தில் நான் ரஃபேல் வாட்ச் வாங்கினேன் என திமுகவினர் அவதூறு பரப்பினர். சாமானியனாக இன்று நான் கேள்வி கேட்கவுள்ளேன். ஒருவாரம் பத்திரிகையாளர்கள் நான் சொன்னதை ஆராயுங்கள். வரும் 20 அல்லது 21ம் தேதி இதே இடத்தில் என்னிடம் வந்து கேள்வி கேளுங்கள்.
முதல் தலைமுறையை சேர்ந்த ஒரு சாமானியன் அரசியலில் இருப்பது சவாலானது. நான் மூன்று தலைமுறை அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் அல்ல. பாஜக மாநில தலைவராக அரசியலில் எனக்கு ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. நண்பர்கள், கட்சியினர் உதவியுடன் செலவுகளை மேற்கொண்டு வருகின்றேன் .
எனது 3 உதவியாளர்களுக்கான ஊதியத்தை என் நண்பர்கள் கொடுக்கின்றனர் . காருக்கான எரிபொருள் செலவை கட்சி கொடுக்கிறது. 33 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புக்கு வந்ததால் பெரிய வீட்டுக்கு குடி ஏறி விட்டேன் . வீட்டு வாடகையை நண்பர் ஒருவர் கொடுக்கிறார். நான் பயன்படுத்தும் கார் நண்பருடையது.
MBA படித்தவுடன் 11 லட்சம் கடனை 7 ஆண்டுகள் சிரமப்பட்டு கட்டினேன். 12 ஆண்டுகால கிரெடிட் கார்ட் பில்லையும் வெளியிட உள்ளேன். இந்த ஊர் என் ஊர் இல்லை .. நான் கட்சிப் பொறுப்பில் இருக்கும் வரைதான் சென்னையில் இருப்பேன். உலகம் முழுவதும் 500 ரஃபேல் வாட்ச் விற்பனையாகியுள்ளது. 147வது ரஃபேல் கடிகாரத்தை நான் கட்டியுள்ளேன்.
இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒன்றை மும்பையை சேர்ந்த நபர் கட்டியுள்ளார். இரண்டாவது வாட்ச் கோவையை சேர்ந்த ஜிம்சன் டைம் பிரைவெட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் மூலம் விற்பனையானது . 2021 மார்ச் மாதத்தில் அதை வாங்கியவர் சேரலாதன் ராதாகிருஷ்ணன் என்பவர். மே மாதத்தில் அவரை தொடர்புகொண்டு அவரிடம் இருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். எனக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்தான் சேரலாதன் ராமகிருஷ்ணன். 27.5.2021லிருந்து என் கையில் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான். 3 லட்சம் ரூபாய்க்கு இந்த வாட்சை வாங்கினேன். ரபேல் வாட்ச் குறித்த பில்லை இணையதளத்தில் வெளியிடுவேன்.
தற்போது வெளியிடப்பட்ட பகுதி 1 காணொலி திமுகவினரின் நேரடியான குடும்ப சொத்துகள் மட்டுமே. அவர்களின் கருப்பு பணமோ , பினாமி சொத்துகளோ அல்ல. புதிதாக திமுகவில் சேர்ந்த சிலர் கருப்புப் பணம் , பினாமி சொந்துகளே 20 ஆயிரம் கோடிக்கு மேல் வைத்துள்ளனர் . அது part 2 ல் வரும். 1லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி சொத்துகள் part 1 ல் காட்டப்பட்டுள்ளது.
2008ல் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிசை ஆரம்பிக்கும்போது அவரிடம் பெரியளவில் சொத்துகள் இல்லை , ஆனால் இன்று 2010 கோடி ரெட் ஜெயண்ட் வசம் உள்ளது. முதலமைச்சர் மருமகன் சபரீசன் money launderingல் ஈடுபடுகிறார். முதலமைச்சர் துபாய் சென்றபோதே இது குறித்து கூறினோம். நேரடியாக ஒரு ஊழல் புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சுமத்துகிறேன். இந்த குற்றத்தில் முதல் குற்றவாளி இவர்தான்.
2006-11ல் திமுக ஆட்சியின்போது 2011 தேர்தலுக்கு முன்பாக சென்னை மெட்ரோ முதல் கட்டப் பணிக்கு (( chennai metro phase - 1 )) அவசர அவசரமாக ஒப்பந்தம் கொடுத்தனர். அந்த ஒப்பந்த மதிப்பு 14 ,600 கோடி ரூபாய் . விதிகளை மீறி வழங்கப்பட்ட அந்த ஒப்பந்தம் மூலம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் மூலமாக 200 கோடி ரூபாய் பணம் 2011 தேர்தல் செலவுக்கு ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது. கருணாநிதி இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்தார். இந்த விசயத்தில் இன்று சிபிஐக்கு புகாரளிக்க உள்ளேன்.
ரயில் பெட்டியில் பழக்கூடையை திருட நினைத்தவர் ( கருணாநிதி) ஆரம்பித்த கட்சி தமிழகத்தில் பாழ்பட்ட அரசியலை செய்கின்றனர். இவர்களை எதிர்த்து சாமானிய மனிதன் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்..? நாங்கள் நடத்துவது ஜனநாயகத்திற்கான போராட்டம் .
1974 ஜெயகாந்தன் திமுக குறித்து எழுதியது, மனித மரியாதைக்கும், நமது கலாசாரத்திற்கு ஏற்பட்ட பேரழிவு திமுக. சமூகத்தில் நிலவிய ஊழல்ளின் மொத்த விளைவு திமுக. தனி மனித அழுக்குகளின் மொத்த வடிகால் திமுக'' என்றார்.
பல பெரிய தொழிலதிபர்களின் எதிர்ப்பை இன்று சம்பாதித்துள்ளேன். எதிர்கட்சி கடைசி ஆண்டில் சில அறிக்கைகளை கொடுத்துவிட்டு 4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வருவது தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாஜக அப்படியல்ல , தினந்தோறும் கேள்வி எழுப்புகிறோம்.
திமுகவினர் ஆருத்ராவால் பாதிக்கப்பட்டோர் என சிலரை ஆட்டோவில் ஏற்றி வந்து கமலாலயம் முன்பு போராட்டம் நடத்த வைக்கின்றனர். ஆரூத்ரா வழக்கை திமுகவிற்கு திராணி இருந்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். என் வாழ்க்கை புத்தகத்தை திறந்து வைத்துள்ளேன். இந்திய அரசியலில் இது முதன்முறை.
கம்யூனிஸ்ட் தலைவர்கள், தொண்டர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. நான் பாஜக தலைவர் உடன் மூத்த கம்யூ., தலைவர் நல்லக்கண்ணுவிடம் சென்று ஆசி வாங்கினேன். கம்யூனிஸ்ட் தலைவர் ஓரிருவர் வேண்டுமானால் எங்காவது இதுபோல வெளியிட்டிருக்கலாம். பிரதமர் சென்னை வரும்போது என்னை சென்னைக்கு வரவேண்டாம் என்றும், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கர்நாடக தேர்தல் பணியில் ஈடுபட்டு வேட்பாளர் பட்டியலை தயார் செய்யுமாறும் கூறினார்.
தினந்தோறும் மோடியை நான் பார்க்கிறேன். மோடியை தமிழ்நாட்டில் வைத்து வரிசையில் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மோடியும் அதை விரும்பமாட்டார். தொண்டர்கள் அவரை பார்க்கட்டும். எதற்கும் துணிந்துதான் அரசியலுக்கு வந்தேன். மாலை போட்டு, கும்பிடு போட்டு தேர்தல் நேரத்தில் ஒன்றுசேர்ந்து கொள்ளும் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையிலிருந்து எதிர்க்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்து விட்டேன்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியின் ஊழலையும் வெளியிடுவேன். அனைவரையும் நான் மொத்தமாக எதிர்ப்பேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாதியாக ஊழலை எதிர்த்து போராடினால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது. நான் ஊழலை எதிர்க்க கூடாதென்றால் டெல்லிக்கு சென்று என்னை பாஐக தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். மோடி விரும்பும் அரசியலைத்தான் நான் செய்வேன்.
யார் தயவிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் 10 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவேன். தஹி எனும் பெயரையே முதலமைச்சரால் மாற்ற முடியாது . கடிதம்தான் எழுத முடியும். முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் , நாங்கள் பிரதமரிடம் தொலைபேசியில் பேசியே அனைத்தையும் செய்து விடுகிறோம்.
'என் மண்... என் மக்கள் ' எனும் பெயரில் ஊழலை எதிர்த்து பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஊழலுக்கு எதிரான எனது நடைபயணம் தொடங்கும். என் மண் என் மக்கள் எனும் செயலி இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஊழலை மொத்தமாக வேரறுப்போம்.
தமிழகத்தின் வருவாய் மதிப்பு இந்த ஆண்டு 2.30 லட்சம் கோடி . ஆனால் திமுகவின் பினாமி சொத்தே இதைக் காட்டிலும் அதிகம்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்க நான் தயார். நான் அமைதியாக இருக்க மாட்டேன். அவர்களது மணல் லாரி , தண்ணீர் லாரி எல்லாம் எங்கிருந்து வரும் என நன்றாக தெரியும். அதனால்தான் கூடுதல் பாதுகாப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் புழல் சிறையில் சில நாட்கள் என்னை அடைக்க முடியும். மின்சாரத்தை தொட்டச்சு , இனி விட முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊழல் பட்டியலை Part -4 வரை வெளியிடுவேன் , வேறு வேறு கட்சிகளும் அதில் இடம்பெறும்'' என்றார்.