குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் ஹமீது அன்சாரி, ‘இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்றச் சுழல் இருக்கிறது’ என்று கூறி இருந்ததற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஹமீது அன்சாரி அளித்த பேட்டி ஒன்றில், ‘தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழல் அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி ராஜ்யசபாவில் நடந்த பிரிவு உபசார விழாவிலும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அப்போது ‘அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும். இதற்கு அனுமதிக்காவிட்டால், அது ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக சிதைத்தது போலாகி விடும்’ என்றார்.
இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறும்போது, ‘அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் ஓய்வுபெறும் நிலையில், அரசியல் கருத்துகள் வெளியிட்டுள்ளார். இத்தகைய கருத்துக்கள் அவரது உயர்பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை. ஓய்வுக்கு பின்னர் அரசியல் புகலிடம் தேட இத்தகைய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.