இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா இன்று இமாச்சலப் பிரதேசம் பாலம்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஆகியோர் எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. ஐ.ஐ.டி., எய்ம்ஸ், மருத்துவக்கல்லூரி, எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பு, சாலை மற்றும் மின்சார தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை இயந்திர அரசு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வரலாற்றில் எழுதி இருக்கிறது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்படலாம் என யாரும் நம்பவில்லை. 70 ஆண்டுகளாக ஜவஹர்லால் நேருவின் தவறை காங்கிரஸ் கட்சி பேணி வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தப்பிறகு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இப்போது ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. மணிப்பூர், அசாம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது. இமாச்சல் பிரதேசத்திலும் அதே நிலைதான் வர இருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளோம். அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விக்னேஷ் முத்து