நாட்டின் தேசியக்கட்சிகளுள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிதான் பணக்காரக் கட்சி என்று தெரியவந்துள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சொத்து மதிப்பு ரூ.894 கோடி என்று அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ் (ஏடிஆர்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதே அறிக்கையில், காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அக்கட்சியின் சொத்து மதிப்பு ரூ.759 கோடி ஆகும். பாஜகவுக்கான கடன் தொகை ரூ.25 கோடி என்றும், காங்கிரஸ் கட்சியின் கடன் ரூ.329 கோடி என்றும் இவ்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஏடிஆரின் இந்த அறிக்கை 2004-2005 முதல் 2015-2016 ஆம் ஆண்டுக்கான காலகட்டத்தில், கட்சிகளின் அசையும், அசையா சொத்துகள், ரொக்கத் தொகை, வாகனங்கள், முதலீடுகள், வைப்பு நிதி, வங்கி கடன் மற்றும் முன் பணம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 11 ஆண்டு கணக்கெடுப்பில், 2014-2015 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிதான் அதிகமான சொத்துகளை வைத்திருந்தது. பாஜக ஆட்சியை பிடித்த பிறகு காங்கிரஸைக் காட்டிலும், அக்கட்சி அதிக சொத்துகளை சேர்த்துள்ளது.
இந்தப் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.557 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.432 கோடி சொத்துகளுடன் நான்காவது இடத்திலும், 5வது இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ரூ.44.99 கோடி சொத்துகளுடன் உள்ளன.
இந்த 11 ஆண்டு காலத்தில் பாஜகவின் வைப்புத் தொகை 700 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 169 சதவிகிதமும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 13.44 சதவிகிதமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1.194 சதவிகிதமும் வைப்புத்தொகை இந்த காலகட்டத்தில் உயர்ந்துள்ளது.