மக்களவைத் தேர்தலோடு, அருணாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்ட போதும், முதல் கட்டத்திலேயே அருணாச்சல் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், ஜூன் 2 ஆம் தேதியுடன் அருணாச்சல் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் நிறைவடைவதால், வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடத்தப்பட்டது.
மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு, 10 தொகுதிகளில் போட்டியின்றி தேர்வாகினர் பாஜக உறுப்பினர்கள். ஆகவே மீதமுள்ள 50 இடங்களுக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடத்தப்பட்டன. இந்த 50 தொகுதிகளில் 36 இடங்களை பாஜக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே, 10 இடங்களில் போட்டியின் பெற்ற பாஜக, மொத்தமாக 46 தொகுதிகளை கைப்பற்றி அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும் சூழலில் 46 தொகுதிகளை கைப்பற்றி அசுர பலத்தோடு 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை தொடர்கிறது.
மற்ற கட்சிகளான தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் அருணாச்சல் மக்கள் கட்சி தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
அருணாச்சல் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”பாஜக தொண்டர்கள், மற்றும் அருணாச்சல் பாஜக பிரமுகர்களுக்கு நன்றி. எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் வளர்ச்சிக்கு பாஜக உழைக்கும். அருணாச்சல் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு பாஜக அழைத்துச் செல்லும்.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.