செய்தியாளர்: ராஜீவ்
ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசார உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸ்-க்கு பாஜக தற்போது பதில் அளித்துள்ளது. ஒரு "உண்மையான தரவின்" அடிப்படையில் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 25 ஆம் தேதி பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு இதுதொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி "நாட்டில் ஊடுருவல்காரங்களுக்காக காங்கிரஸ், இந்திய பெண்களின் மங்கள சூத்திரத்தைப் பறிக்கும்" என்ற கருத்துக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் கட்சி தலைமை பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியது பாஜக.
இந்த நிலையில் நேற்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அளித்துள்ள பதிலில், “கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் கூறியதன் அடிப்படையில்தான் பாஜக உண்மைகளை முன்வைத்துள்ளது. பிரதமரும் இதைத்தான் குறிப்பிட்டார்” என தெரிவித்துள்ளது. பிரதமரின் பேச்சுக்கு ஒரு கட்சியின் தலைமையை பதிலளிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மீதான புகார்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சார்பில் அக்கட்சி கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.