ராஜஸ்தான்: 1 கோடி மக்கள் பரிந்துரைகளால் உருவாக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நட்டா!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
rajasthan bjp
rajasthan bjppt web
Published on

ராஜஸ்தான் தேர்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 200 தொகுதிகளை உடைய ராஜஸ்தான் மாநிலத்தில் 5,26,80,545 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 51, 756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ், பாஜக இரண்டு முக்கிய கட்சியாக இருந்தாலும், ராஷ்ட்ரிய லோக் தன்ட்ரிக், மாயாவதியின் பஹுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் ரேசில் முந்துகின்றன. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 39.8% வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் 39.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. பஹுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

பாஜக தேர்தல் அறிக்கை

இந்நிலையில் 25 ஆம் தேதி நடைபெறும் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வரும் சூழலில் பாஜக தற்போது தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவரான ஜே.பி.நட்டா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், மாவட்டந்தோறும் மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும், மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக Anti Romeo படைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் சேமிப்புப் பத்திரம் வழங்கப்படும் என்றும், ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், 5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஐந்து ஆண்டுகளில் 2,50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி, 12 ஆம் வகுப்பு பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

rajasthan bjp
Soft Hindutva-வை கையிலெடுக்கும் காங்? வேலையற்ற நிலையில் 39 லட்சம் மக்கள்...ம.பி. தேர்தல் களம்

ஒரு கோடி மக்களின் பரிந்துரைகள்

கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜூன்ராம் மேக்வால் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “கட்சியின் நிகழ்ச்சிகளான ஆகன்ஷா பெட்டி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட ஒருகோடிக்கும் அதிகமான மக்களின் பரிந்துரைகளைக அடிப்படையாகக் கொண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com