லாலு பிரசாத் மகன்கள் மற்றும் மகள் மீது பாஜக நில மோசடி புகார் தெரிவித்துள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் அமைச்சரவையில் லாலுவின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். லாலுவின் மகள் மிசா பாரதி எம்பியாக உள்ளார்.
கடந்த சில வாரங்களாக லாலு மகன்கள் மீது நில மோசடி புகாரை பாஜக கூறி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது லாலுவின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான மிசா பாரதி மீதும் தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ளது. புகாரில், மிசாபாரதி தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், முறைகேடு வழக்கில் லாலு தண்டனை பெற்ற பிறகும் அவரது குடும்பத்தினர் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்தான் சமூக நீதி குறித்து பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
ரூ.1.41 கோடி மதிப்பிலான நிலம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பண்ணை வீடு அமைக்கப்பட்டுள்ளதாக மிசா பாரதி மற்றும் கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு லாலு மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, அவரது மகள் மிசா பாரதி, மனைவி ராப்ரி தேவி ஆகியோரின் பெயரில் பல கோடி ரூபாய் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்போது அவரது குடும்பத்தினர் பல்வேறு நிறுவனங்களை தொடங்கினர். இவை அனைத்தும் லாலு வீட்டின் முகவரியில் செயல்பட்டன. ஊழல் செய்து லாலு குடும்பத்தினர் ரூ.1000 கோடி வரை சொத்துகளை குவித்துள்ளனர்.
இவர்கள் மீது நிதிஷ் தலைமையிலான பீகார் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.