பாஜக எம்எல்ஏவும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான ஸ்ரீமந்த் பாட்டீல், 2019 ல் காங்கிரசில் இருந்து மாற பாஜக தனக்கு பணம் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் கக்வாட் தொகுதியிலுள்ள ஐனாபூர் கிராமத்தில் பல வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்த ஸ்ரீமந்த் பாட்டீல், " 2019 ல் காங்கிரசில் இருந்து மாற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் நான் பணத்தை மறுத்து, அரசு அமைந்த பிறகு எனக்கு ஒரு நல்ல பதவியை தரும்படி அவர்களிடம் கேட்டேன்" என்று அவர் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு பசவராஜ் பொம்மை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஸ்ரீமந்த் பாட்டீல், இது குறித்து பேசிய அவர், “பாஜகவில் இணைந்த பிறகு நான் எனது தொகுதியை மேம்படுத்த விரும்பினேன், அதனால்தான் நான் ஒரு பெரிய பதவியை கோரினேன். தலைவர்கள் ஒப்புக்கொண்டு என்னை அமைச்சராக்கினார்கள். ஆனால் இந்த முறை, நான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன். இருப்பினும், அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எனக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்” என தெரிவித்தார்.