மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு கட்சி சார்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்தும், மத்திய இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்தும் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பொருத்தமட்டில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர், தேசிய பட்டியலினத்தோர் ஆணைய துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து பா.ஜ.க. களம் கண்ட நிலையில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட மாட்டார் என்பதால் அங்கு யார் பா.ஜ.க.சார்பில் களம் இறங்க வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.