உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் இன்று, பிராண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், அயோத்தி ராமர் சிலை செய்வதற்கு, கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள கிராமத்திலிருந்துதான் கல் வழங்கப்பட்டிருந்தது. அப்படியான சூழலில், அக்கிராமத்திற்குச் சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார், அந்தத் தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா. இதற்காக அவர் இன்று காலை அந்தக் கிராமத்திற்குச் சென்றபோது அக்கிராம மக்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் அந்த மக்களைப் புறக்கணித்து வருவதாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். அவர் பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், இதற்குமுன்பு தங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்ஹாவை தடுத்துநிறுத்தும் கிராம மக்கள் கன்னடத்தில் கூச்சலிடுவதும், பின்னர் கிராம மக்களை சிம்ஹாவுடன் பாதுகாப்பிற்குச் சென்ற போலீசார் பிடித்து இழுத்துச் செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கூச்சலுக்கு மத்தியில் விரக்தியுடன் காணப்பட்ட சிம்ஹாவை, அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவைக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு சிலமணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “நான்தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலி” - ராம் லல்லா சிலையின் சிற்பி பெருமை
அந்த வீடியோவில் ஒருவர் எம்.பி. சிம்ஹாவைப் பார்த்து, “நீங்கள் எங்கள் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் செய்துள்ளோம். நாங்களும் ராமரை மதிக்கிறோம். தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள்” என எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த மாதம் புது நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வண்ணக் குப்பிகளை வீசியதாகச் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாகர் சர்மா மற்றும் டி.மனோரஞ்சன் உள்ளிட்டோருக்கு இவர்தான் பாஸ் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, அவர் நாடாளுமன்ற விவகாரத் துறையிடம் விரிவான விளக்கம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராமர் கோயில் நேரலைக்கு அனுமதி மறுப்பா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு